தமிழகம் முழுவதும் 35,000 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள்.
ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள், எழுத்தர்கள் என 25 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். தற்போது 3,000 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்தநிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு நியாயவிலைக்கடை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயச்சந்திர ராஜாவிடம் பேசினோம்,
“காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும். ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளுக்கு வரும் ஒவ்வொரு அரிசி மூட்டையும் 50 கிலோ 650 கிராம் எடை இருக்க வேண்டும். ஆனால், ரேஷன் கடைக்கு வரும் போது 45 முதல் 47 கிலோ மட்டுமே எடை இருக்கிறது.
மேலும், அரிசி, பருப்பு, பாமாயில். கோதுமை போன்ற பொருட்களும் நூறு சதவிகிதம் இறக்குமதி செய்யாமல், 85 முதல் 90 சதவிகிதம் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும் எங்களுக்குமிடையில் பிரச்சனை ஏற்படுகிறது.
எனவே அனைத்து ரேஷன் கடைகளிலும், 100 சதவிகிதம் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். மேலும், சரியான எடையில் பாக்கெட் முறையில் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 5-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் கடைகளை திறக்க அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் கு.ப என்கிற பாலகிருஷ்ணன் நம்மிடம் பேசும்போது,
“சரியான எடையில் ரேஷன் பொருட்களை பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும். 100 சதவிகிதம் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.
தற்போது மத்திய அரசு சார்பில் ஒரு பில்லும், மாநில அரசு சார்பில் ஒரு பில்லும் போட வேண்டியிருக்கிறது. இதனால் ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. அதனால் ஒரே பில் போடும் முறையை கொண்டு வர வேண்டும்.
பொருட்களை இறக்குமதி செய்யும் போது இறக்கு கூலி கேட்க கூடாது. அனைத்து ஊழியர்களுக்கும் வங்கி மூலம் சம்பளம் போட வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம்” என்றார்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்சிக் கொடி ஆன்லைன்ல ரிலீஸ்… அப்டேட் குமாரு
எடப்பாடிக்கு பொலிட்டிக்கல் மெச்சூரிட்டி இல்லை… விளாசிய அண்ணாமலை