ரேஷன் கடை ஊழியர்கள் தேர்வுக்காக நடைபெற்ற நேர்காணல் முடிவுகள் வெளியிட வேண்டும் என்று நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் அதிகமான விற்பனையாளர் பணியிடங்களையும், 900க்கும் அதிகமான எடையாளர் பணியிடங்களையும் நிரப்புவதற்கு கடந்த ஆண்டு கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டது.
பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விற்பனையாளர் பணிக்கும், எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் எடையாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விற்பனையாளர் பணிக்கும், 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எடையாளர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த ஆண்டு இறுதியில்நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு இந்த ஆண்டு மார்ச் இறுதியில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிய பின்னர் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் வாயிலாக ஆட்களை நிரப்பி கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை குறிப்பிட்டு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை சுற்றறிக்கை அனுப்பியது.
அதில் தங்கள் மண்டலத்தில் பணிபுரியும் தகுதியுள்ள விற்பனையாளர் ,எடையாளருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விபரத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது.
இதனால் கூட்டுறவு பணியாளர்கள் நேர்காணல் முடிவுகளை வெளியிட தாமதமானது.
கடந்த ஜூலை மாதம் நாகை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் தேர்வான விற்பனையாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து செங்கல்பட்டு, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நீலகிரி, சேலம், சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவாரூர் ஆகிய மாவட்டம் முடிவுகள் வெளியாகின.
ஆனால், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் முடிவுகள் வெளியாகவில்லை.
இந்நிலையில் முடிவுகளை வெளியிடாத மாவட்டங்களிலும் வெளியிட வேண்டும் என்று அனைத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னேற்ற அமைப்பு வலியுறுத்தி அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் உணவுத்துறை செயலாளர் ஜகந்நாதன் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளது.
அதில், கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த நேர்காணல் தேர்வுக்கு ஜனவரி 15ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சில மாவட்டங்களில் மட்டுமே முடிவுகள் வெளியாகியுள்ளன. வெளியிடாத மாவட்டங்களில் விரைவில் வெளியிட்டு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
முடிவுகள் வெளியானால் தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட, மாவட்டங்களில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
பிரியா
சிறப்புக் கூட்டத்தொடர்: மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!
விரைவில் உங்களை சந்திக்கிறேன்: வதந்தியில் சிக்கிய திவ்யா ஸ்பந்தனா விளக்கம்!