நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே ஆற்றில் ஒரு டன் ரேஷன் அரிசி கொட்டப்பட்டு கிடந்தது அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
வேளாங்கண்ணி அருகே உள்ள சின்னத்தும்பூர் ஊராட்சியில் மரவனாறு செல்கிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் அரிசி குவியலாக கொட்டி கிடந்துள்ளது. இதைக் கண்ட அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதில் ஒரு டன் அரிசி ஆற்றில் கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்த அரிசி எந்த ரேஷன் கடையில் இருந்து கொண்டு வரப்பட்டது, கடத்தப்பட்ட அரிசியா, ஆற்றில் அரிசியைக் கொட்டியவர்கள் யார் என்பது பற்றி வேளாங்கண்ணி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் அரிசி கொட்டப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-ராஜ்