புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் சிறையில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். பின்னர், இரண்டு நாள்களுக்குப் பிறகு அதே பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்காலில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
ஒன்பது வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், புதுச்சேரியை போராட்டக்களமாக மாற்றியது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் என்ற முதியவரும், கருணாஸ் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன், இன்று அதிகாலை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை 5 மணிக்கு அவரது உடலை மீட்ட சிறைக் காவலர்கள், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறையில் விவேகனாந்தன் உயிரை மாய்த்தது குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, விவேகானந்தனும், கருணாஸும் தனி செல்லில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த செல்லின் வராந்தாவில்தான் இருவரும் படுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.
கழிவறைக்கு மட்டும் உள்ளே சென்று வருவதாக கூறப்படுகிறது. இருவருக்கும் தனித்தனியாக துண்டு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கருணா உறங்குகையில் அவரின் துண்டை தன்னுடைய துண்டுடன் முடிச்சுப் போட்ட விவேகானந்தன், சிறைக் கம்பிகளில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதன் முதலில் கருணாஸ்தான் விவேகானந்தன் தூக்கில் தொங்குவதை பார்த்து போலீசாருக்கு தகவலும் கொடுத்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட விவேகானந்தனுக்கு 57 வயதாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஓணம் கொண்டாட்டம் : குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்
ரூ.55 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!