பெண் வழக்கறிஞருக்கு ட்விட்டரில் ஆபாசமான பதிலளித்த ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாக பேசியிருந்தார்.
“சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பொது மேடையில் பேசினார். அதனால் அவருக்கு பிராமண தோஷம் ஏற்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் பிராமண தோஷத்தை நீக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலினிடம் ஒரு ஜோசியர் சொல்லியிருக்கிறார்.
அதனால், ஸ்ரீவல்லிபுத்தூர் ஜீயர் சுவாமி, ஆழ்வார்திருநகர் ஜீயர் சுவாமி, ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமி ஆகிய மூன்று பேருக்கும் பாதபூஜை செய்து உதயநிதி தோஷத்தை கழித்துள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.
இதனால் அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி திருச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள ரங்கராஜன் நரசிம்மன் மீது நேற்று (டிசம்பர் 19) இன்னொரு வழக்கு போடப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் தேதி ரங்கராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
அதில், “11.12.2024 அன்று பட்டியலிடப்பட்ட என் மீதான வழக்கு ஒன்று இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த வழக்கு 12.12.2024 இல் பட்டியலிடப்படும் என்று இணையதளத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் 12.12.2024 அன்றும் பட்டியலிடப்படவில்லை. ஆனால், இந்த வழக்குக்காக நான் உச்ச நீதிமன்றம் வரை சென்று வந்ததால் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானது. இது ஒரு வீண் பயணம்” என்று பதிவு செய்திருந்தார்.
இதற்கு உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் அனுஷா, “வீடியோ கான்ப்ரன்ஸை பயன்படுத்தியிருக்கலாம். பயணச் செலவைச் சேமிக்க இது உங்களுக்கு உதவியிருக்கும்” என்று கமெண்டில் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதற்கு ரங்கராஜன், “நிறைய யோசனைகளை கொடுக்கலாம். ஆனால் நீங்கள் இருக்கும் அறையில் இருந்து வழக்கை எதிர்த்து போராட முடியுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த பதிலுக்கு அனுஷா, “நீங்கள்தான் வீண் பயணம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதனால் ஆலோசனை சொன்னேன். உங்கள் அறையில் இருந்து வழக்கை எதிர்த்து போராட உச்ச நீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்டதுதான் வீடியோ கான்பிரன்சிங் முறை. இதை நாங்கள் கோவிட் காலத்தில் இருந்து பின்பற்றி வருகிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ரங்கராஜன், “நான் உங்களிடம் பரிந்துரை கேட்டேனா… இதுதான் அதிக பிரசங்கிதனம். உங்களை போன்ற வழக்கறிஞர்கள் பயனற்றவர்கள். மற்றவர்களின் நேரத்தை எப்படி வீணாக்குவது என்பது உங்களுக்குத் தெரியும்” என்று விமர்சித்திருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு அனுஷா, “நீங்கள் மீண்டும் ஒருமுறை உச்ச நீதிமன்றம் சென்று தெய்வீக கதவுகளைத் தொட விரும்பினால், அது உங்களுடைய விருப்பம். என்னிடம் கருத்துகளோ, பரிந்துரைகளோ இல்லை” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த பதிவுக்கு ரங்கராஜன், “நான் உன்னிடம் கேட்டேனா… ” என்று அவதூறாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு அனுஷாவும் காட்டமாக பதில் அளித்திருந்தார் தொடர்ந்து அவர், திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் நேற்று (டிசம்பர் 19) ரங்கராஜன் மீது புகார் அளித்தார்.
அதன்படி குற்ற எண் 538/2024 – பெண்ணின் அந்தரங்கங்களை பற்றி பேசுவது, பொது இடத்தில் அசிங்கமாகவும், அவதூறாகவும் பேசி அழைப்பது, பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு (D1-Cr.No:538 u/s 75, 79 BNS Act r/w 4 Of TNHW And 67 IT Act) உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சட்டப்பிரிவு 75 எளிதில் பிணையில் வரமுடியாத பிரிவாகும்.
இந்த வழக்கிலும் ரங்கராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ரங்கராஜன் மீது இன்னும் சிலர் புகார் கொடுக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள் திருச்சி ஸ்ரீரங்கம் காவல்துறை வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி, பிரியா
ராகுல் எங்கே நின்றார் தெரியுமா?: வீடியோ வெளியிட்டு ஜோதிமணி விளக்கம்!
Comments are closed.