பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் மலர் வளையத்திற்கு பதிலாக மாலை அணிவிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் 61வது குருபூஜை மற்றும் 116ஆவது ஜெயந்தி விழா ஆன்மீக விழாவாக இன்று (அக்டோபர் 28) காலை 7 மணி அளவில் மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் தேவர் திருமகனாரின்116வது பிறந்தநாள் விழா மற்றும் 61வது குருபூஜை விழா 30.10.2023 அன்று நடைபெறுவதையொட்டி, அரசு விழா நிகழ்ச்சியில் பசும்பொன் தேவரின் வாரிசு தாரர்கள் மற்றும் சமுதாய மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மலர்வளையத்திற்கு பதிலாக அன்னாரின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.
அதன்படி அனைவரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் மலர் வளையத்திற்கு பதிலாக மாலை அணிவிக்க வேண்டும்” என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் நிகழ்வுகள் என்ன?
ஆன்மீக விழா இன்று காலை தொடங்கிய நிலையில், வளாகத்தில் உள்ள விநாயகர், சுப்பிரமணியர், முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் முதலாம் ஆண்டு வருசாபிஷேக பூஜை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் நடைபெறுகிறது
தொடர்ந்து தேவரின் வாழ்க்கை, வரலாறு புகைப்பட கண்காட்சியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைக்கிறார். மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 7 மணிக்கு தேவரின் தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் 2ஆம் நாளான நாளை பொதுமக்கள் மற்றும் பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்தும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மூன்றாம் நாளான வரும் 30ஆம் தேதி தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்களும் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனையொட்டி குருபூஜையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்க மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Asian Para Games 2023: 100 பதக்கங்களை கடந்து இந்தியா புதிய வரலாறு!