Rameswaram Fisherman Rail Strike

27 மீனவர்கள் கைது: பாம்பன் போராட்டம் வாபஸ்… ரயில் மறியல் அறிவிப்பு!

தமிழகம்

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள், ஐந்து படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று (அக்டோபர் 18) பாம்பன் பாலத்தில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்துக்குப் பதிலாக நவம்பர் 1ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில், 3,500 மீனவர்கள் மற்றும் சார் தொழிலாளர்கள் என 10,000-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.

ஆனால், அடிக்கடி இலங்கை  கடற்படையினரால் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவதால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து கடந்த 14ஆம் தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 27 மீனவர்கள் மற்றும் அவர்களின் ஐந்து விசைப்படகுகளை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்வதால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான இறால் மற்றும் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (அக்டோபர் 18) பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

இதற்கிடையே நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இதை அடுத்து இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கு பதிலாக தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் வருகிற 27ஆம் தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதோடு, அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும்,

அவ்வாறு செய்யாவிட்டால் நவம்பர் 1ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், அதுவரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், 27 மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

ராஜ்

போய்வா புரட்டாசியே… வா வா ஹை பசியே.: அப்டேட் குமாரு

தேசிய திரைப்பட விருது விழா…போட்டோ கேலரி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *