தொடரும் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (நவம்பர் 7) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 5 ஆம் தேதி மாலை 3 மணியளவில் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
15 மீனவர்கள் கைது
மீனவர்கள் சிலர் தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் படகிலிருந்த அந்தோணி ராயப்பன், அவரது மகன் இம்ரோன் ராபின்சன் (14), லியோ, ஜாய்சன், எஸ்ரா, முருகன், நம்புமிலன், காளிமுத்து, வினோத், நம்புகுமார், அந்தோணி, அருணாச்சலம், பாண்டி, செந்தூர்பாண்டி, மருது ஆகிய 15 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.
அவசர ஆலோசனைக் கூட்டம்
இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் மீன்பிடி இயங்குதளம் அருகே, மீனவ விசைப்படகு சங்கத் தலைவர் சேசு ராஜா தலைமையில் நேற்று (நவம்பர் 6) அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, மீனவர்களையும் விசைப்படகுகளையும் விடுவிக்கக் கோரி இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சிறுவன் இம்ரோன் ராபின்சனுக்கு சிறுநீரகம் பாதித்துள்ளதாகவும், மனிதாபிமான அடிப்படையில் சிறுவனை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேசு ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலைநிறுத்த போராட்டம்
அறிவித்தபடி இன்று ராமேஸ்வரம் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு எடுத்துச் செல்லப்படாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தினால் மட்டும் சுமார் 5 முதல் 6 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி சார்பு நிறுவனங்கள் வேதனை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (நவம்பர் 8) தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தவுள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சிறுநீரகம் பாதித்த சிறுவனைக் கடலுக்கு அழைத்துச் சென்றது குறித்து, மீன்வளத் துறையினரும், கடலோரக் காவல் படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
உயர்ந்து கொண்டே வரும் தங்கம் விலை!
10% இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு: நீதிபதி ரவீந்திர பட் சொன்னது என்ன?