ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்ககோரி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்கியது.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் கடல் பகுதியிலிருந்து இலங்கை வரை கடல் வர்த்தகத்தை பெருக்கும் வகையில் சேது சமுத்திர திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால், இந்துக்களின் மத நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படும் இந்த ராமர் பாலம் சேது சமுத்திர திட்டத்தினால் அழிந்துபோகும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்ததையடுத்து இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்தநிலையில், அந்தத் திட்டத்திற்கு தடை கோரி கடந்த 2009 ஆம் ஆண்டு பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில், ராமர் பாலத்திற்கு எந்தவித சேதமும் இல்லாமல் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கை தொடுத்தார் சுப்பிரமணிய சுவாமி.
மேலும் , ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் பட்சத்தில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை கோரிய தனது வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்து இருந்தார்.
கடந்த 2018ம் ஆண்டு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக்குவது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பு கடந்த 2020 ம் ஆண்டு இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென மீண்டும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு சுப்ரமணிய சுவாமி மீண்டும் இந்த வழக்கு தொடர்பாக நினைவூட்டல் கோரிக்கையை வைக்கும்படி அறிவுறுத்தினார். ஆனால் இந்த வழக்கில் இது வரை மத்திய அரசு தனது நிலைபாட்டை தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் இந்த வழக்கு கடந்த 2022 நவம்பர் 10ம் தேதியன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான சுப்ரமணிய சுவாமி,
இந்த விவகாரத்தில் மத்திய அரசு “ஆம் அல்லது இல்லை” என ஒற்றை வார்த்தையில் கூறினால் பிரச்சனை தீர்ந்தது. ஆனால் அதை விடுத்து வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டினார்.
அப்போது, தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க கால அவகாசம் வேண்டுமென மத்திய அரசு கூறியபோது, இதையேதான் தொடர்ந்து மத்திய அரசு செய்து வருகிறது என சுப்பிரமணிய சுவாமி மீண்டும் குறை கூறினார்.
எனினும் மத்திய அரசுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய நான்கு வார காலம் அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று(ஜனவரி 12) உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பாக இன்னும் எந்த ஒரு முடிவும் தெரிவிக்கப்படவில்லை என சுப்பிரமணிய சுவாமி மீண்டும் குற்றம் சாட்டினார்.
அப்போது ஏன் இன்னும் பதில் அளிக்கப்படவில்லை? என தலைமை நீதிபதி கேட்டபோது, அதற்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,
இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவை இன்னும் முடிவெடுக்கப்படாமல் இருப்பதாகவும், எனவே வழக்கை பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரினார்
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்ரமணிய சுவாமி ஏற்கனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்பட்டு விட்டதாக சொல்லி இருந்த நிலையில் தற்பொழுது அதை மாற்றி சொல்கிறார்.
இது அமைச்சரவை தொடர்பான விவகாரம் என்பதால் அமைச்சரவை செயலாளருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என சுப்ரமணிய சுவாமி கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, பிப்ரவரி முதல் வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கியதோடு, வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
கலை.ரா
அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கிறார் முதல்வர் – சேகர்பாபு