ஹைட்ரோகார்பன் கிணறுகள்… ராமநாதபுரமே பாலைவனமாக மாறும்: வேல்முருகன்

Published On:

| By Monisha

Ramanathapuram will become a desert

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைத்து வளங்கள் எடுக்கப்பட்டால் ராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறும் என்று தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். Ramanathapuram will become a desert

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்) தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியிருந்தது.

தமிழ்நாட்டில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி முயல்வதற்கு அமமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கப்பட்டால், ராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்கும் திட்டத்துடன் அங்கு 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க, தமிழ்நாடு அரசிடம், ஒன்றிய அரசின் ஓ.என்.ஜி.சி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டை வட்டத்திலும் இந்த சோதனை கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

அப்பகுதிகளில், 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது.

நீரியல் விரிசல் என்ற இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேதிப்பொருட்களின் கலவையை பூமிக்குள் செலுத்தி, பாறைகளை விலக்கி, அவற்றுக்கு நடுவில் உள்ள மீத்தேன் எரிவாயு எவ்வாறு எடுக்கப்படுமோ, அதேபோல் தான் ஹைட்ரோகார்பன் வளமும் நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படும்.

இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போது நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.

இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கப்பட்டால், ராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் காவிரி டெல்டா விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த நிலையில் புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கண்டனத்திற்குரியது. எனவே, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டும்.

பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அறிக்கையின் அடிப்படையில், ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Ramanathapuram will become a desert

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

அதிமுக கொடி, சின்னத்தை பன்னீர் பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் அதிரடி!

புதுவையிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel