ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் குடிநீர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களில் மக்கள் குடிதண்ணீருக்காக கஷ்டப்படும் நிலை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. திருச்சியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கொண்டுவரப் பட்டிருந்தாலும் இன்னும் மக்களின் குடிநீர் பிரச்சினை முழுமையாக தீரவில்லை.
அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.
பின்னர் சாயல்குடி வந்த அவர் நிருபர்களிடம் பேசியபோது, “கடந்த 10 ஆண்டுகளாக முதுகுளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் கடந்த ஆட்சியாளர்கள் சென்று விட்டனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு மக்களின் குறைகள் உடனுக்குடன் களைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் முதுகுளத்தூர் தொகுதியில் பழுதடைந்த டிரான்ஸ்பார்ம் மற்றும் மின் கம்பங்களை மாற்றி சீரான மின் விநியோகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் இல்லாத மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் ராமநாதபுரம் மாவட்டம் குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பணிகள் நடைபெறுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நடைபெற்று தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக ராமநாதபுரம் மாறும்.
முதுகுளத்தூர் தொகுதி முழுவதும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழையே பெய்யாவிட்டாலும் ஒருபோக விவசாயத்துக்கு வைகையில் இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து முதுகுளத்தூர் தொகுதி கண்மாய்களில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
– ராஜ்