நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 17) உத்தரவிட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சியில் நடைபயிற்சி சென்றபோது அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐசிடி, சிபிஐ விசாரித்தது. ஆனால் கொலைக்கான நோக்கம் மற்றும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
இந்த வழக்கை மாநில போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் அரியலூர் டிஎஸ்பி மதன் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் “இந்த சம்பவம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. இதுவரை கொலைக்கான காரணம் தெரியவில்லை. இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறதா” என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு “தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திருப்தி அளிப்பதாகவும் நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாகவும்” தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக 1040 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தியிருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சிறப்பு புலனாய்வு குழு தங்களது விசாரணையை தொடர அனுமதி அளித்தும் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.
செல்வம்