அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் தெரிவித்த ரவுடிகளுக்கு 2 ஆவது நாளாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது.
வழக்கில் 10 ஆண்டுகளாக துப்பு துலங்காத நிலையில், 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
அதற்காக சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 ல் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதன்படி, நவம்பர் 14 ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி, ரவுடிகளான சத்யராஜ், லட்சுமி நாராயணன்,
சாமி ரவி, ராஜ் குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.
மேலும் நவம்பர் 17 ஆம் தேதி மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய நான்கு பேர் ஆஜராகி சோதனைக்கு ஒப்புதல் தெரிவித்தனர். இதில் தென்கோவன் என்கிற சண்முகம் மட்டும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
நீதிபதி சிவக்குமார், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்ட 12பேருக்கும் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் ஆகிய 6 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
2- வது நாளாக இன்று(நவம்பர் 19) மோகன்ராம், நரைமுடி கணேஷன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 5 பேர் பரிசோதனைக்கு வந்தனர்.
பரிசோதனைக்கு பின்பு வரும் 21 ஆம் தேதி அனைவரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம்தான் உண்மை கண்டறியும் சோதனை எப்போது செய்யப்படும் என்ற விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கலை.ரா