ராமஜெயம் வழக்கு: 12 ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை!

தமிழகம்

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், பிரபல ரவுடிகள் 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் வரும் நவம்பர் 1ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர், வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

ஆனால், குற்றவாளிகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ராமஜெயம் வழக்கை, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இவ்வழக்கு சம்பந்தமாக தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்தியராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமிநாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் உள்ளிட்ட 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட அனுமதி வேண்டி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் வரும் நவம்பர் 1ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

வினோத் அருளப்பன்

பாஜக நிர்வாகி புகார்: இணையதளம் மீது வழக்குப்பதிவு!

இனிமே மழைதான்: வானிலை மையம் புதிய தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *