அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 ரவுடிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கில் துப்பு துலங்கவில்லை. இதையடுத்து வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
அந்த வகையில் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரபல ரவுடிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி மோகன்ராம், தினேஷ் , நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம் , சிவ குணசேகரன் உள்ளிட்டோருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் 11 பேர் நவம்பர் 1 ஆம் தேதி திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.
அப்போது சிறப்பு புலனாய்வு குழு மனுத்தாக்கல் செய்யவேண்டும் என எதிர்தரப்பினர் வாதிட்டதால் நீதிபதி வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.
அதன்படி கடந்த 7 ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயகுமார் மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.
என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என ரவுடிகள் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி ராமஜெயம் கொலை வழக்கு இன்று(நவம்பர் 14) மீண்டும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடிகளான சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ் குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் ஒப்புக்கொண்டனர். தென்கோவன் (எ) சண்முகம் மட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை.
மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கலை.ரா
குழந்தைகள் தினம்: இதயங்களை கவர்ந்த வீடியோ!
அசைந்து கொடுத்த ஆளுநர்: 322 கைதிகள் விடுதலைக்கு ஒப்புதல்!