குழந்தை ராமர் சிலையின் கண்கள் : சர்ச்சையின் பின்னணி என்ன?

Published On:

| By Kavi

அயோத்தியில் நாளை (ஜனவரி 22) ராமர் கோயில்  திறப்பு விழா நடைபெறவுள்ளதையொட்டி அந்த பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.  ராமர் சிலை பிரதிஷ்டைக்காக பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இருந்து புனித நீரை எடுத்துச் சென்றுள்ளார்.

2019ல் உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து 2020ல் பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார்.

இன்னும் கோயில் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத நிலையில், நாளை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய மாநிலங்களைத் தவிர, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா,  ஹரியானா, சத்தீஸ்கர்,  ராஜஸ்தான், ஒடிஷா, உத்தரகாண்ட்,  கோவா, திரிபுரா, அசாம்  என பல்வேறு மாநிலங்களுக்கும் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா என தென் மாநிலங்களிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அந்தந்த மாநில பாஜக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுபக்கம் நாடுமுழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் அயோத்திக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ராமர் கோயில் விழாவில் சுமார் 10,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்திக்கு வருகை தருபவர்களுக்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை மற்றும் அயோத்யா வளர்ச்சிக் கழகம் சார்பில் நவீன கூடாராங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. லக்சுரி மற்றும் செமி லக்சுரி என்ற வகையில் இந்த கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.

71 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் 44 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவராக 5 அடி பால ராமர் இடம் பெறுகிறார். சிலை பிரதிஷ்டை செய்வதற்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதியே தொடங்கி நடைபெற்றன.

கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக கடந்த 19ஆம் தேதி கோயிலின் கருவறைக்குள் கிரேன் மூலம் கொண்டு வரப்பட்டு ராமர் சிலை வைக்கப்பட்டது. இதன் புகைப்படத்தை மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வெளியிட்டிருந்தார். அதில் கைகளில் தங்க வில் மற்றும் அம்புடன் ராமர் நிற்கும் வகையில் முகத்தை மூடிய புகைப்படங்கள் வெளியாகின.

அதேசமயம் மற்றொரு புகைப்படமும் வெளியானது. பிரதிஷ்டை செய்வதற்கு முன்னதாக கண்கள் தெரியும் வகையில் இணையத்தில் ராமர் சிலை படம் வைரலானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் கூறுகையில், “புதிய சிலை இருக்கும் இடத்தில் பிராண பிரதிஷ்டை செய்வதற்கான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

பிராண பிரதிஷ்டை முடிவதற்குள் ராமர் சிலையின் கண்கள் திறக்கப்படாது. ராமரின் கண்கள் தெரியுமாறு வைரலாகும் சிலை உண்மையான சிலை அல்ல.

சிலையின் புகைப்படங்கள் எப்படி வைரலாகின்றன. இதை யார் செய்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிராண பிரதிஷ்டை நடைமுறைகளை தொடர்ந்து ராமர் கண் திறக்கப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சர்ச்சைக்கு மத்தியில் அயோத்தி கோயிலில் தீவிரமான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்ட டன் கணக்கான பூக்களை கொண்டு ராமர் கோயிலை அலங்கரித்து வருகின்றனர்.  வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளதால் ராமர் கோயில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

நாளை பூர்வாங்க பூஜைகள் நிறைவடைந்த பின்னர் மதியம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் உள்ள அபிஜீத் முகூர்த்த நேரத்தில், காலை 11.51 மணிக்கு தொடங்கி மதியம் 12.33 மணிக்கு சிலை பிரதிஷ்டை முடிவடைகிறது. இதிலும் மதியம் 12.29.08 முதல் 12.30.32 வரை அதாவது 84 வினாடிகள் நல்ல நேரம் என கூறப்பட்டு, இந்த நேரத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி முன் நடைபெறுகிறது. இதற்காக 11 நாட்கள் வெறும் இளநீர் மட்டும் அருந்தி பிரதமர் மோடி விரதம் இருந்து வருகிறார். முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்து புனித நீரை எடுத்துச் சென்றுள்ளார் பிரதமர் மோடி.

இந்த பிரதிஷ்டையை முன்னிட்டு நாடு முழுவதிலுமிருந்தும் பல்வேறு சமூகம் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த 15 தம்பதிகள் “யஜ்மான்கள்” கடமையைச் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆடலரசனும், அவரது மனைவியும் இடம் பெற்றுள்ளனர்.

நாளை கும்பாபிஷேக விழா முடிவடைந்ததும் நாளை மறுநாள் முதல் பொதுமக்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மேடையில் ஸ்டாலினுக்கு உதயநிதி வைத்த டிமாண்ட்!

GOAT பர்ஸ்ட் சிங்கிள் எப்போது?… வெளியான புதிய தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share