சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில், தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு தீ விபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 27) அதிகாலை 3.30 மணியளவில் கொரோனா சிகிச்சைப் பிரிவு உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
கொரோனா சிகிச்சைப் பிரிவில், நோயாளிகள் ஐந்து பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் நோயாளிகள் அருகில் உள்ள வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.
மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து அரை மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கொரோனா சிகிச்சைப் பிரிவானது, தரைத் தளம், முதல் தளம் என்று இரண்டு தளங்களாக செயல்படுகிறது.
இதில் தரைத் தளத்தில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில், சிலிண்டர்கள் அடுக்கி வைக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
அதற்குப் பின்புறம் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் தான் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ஏற்பட்ட தீ விபத்தால் மருத்துவமனை வளாகத்தில் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, மருத்துவமனை தரப்பில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஏப்ரல் மாதம் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் நோயாளிகள் யாரும் இல்லை. ஆனால், தற்போது தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் நோயாளிகள் இருந்துள்ளனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் இயங்கிவரும் காவல் நிலைய போலீசார் தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
செல்வம்
டீ கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து!