ராஜீவ்காந்தி கொலை:  காயமடைந்த பெண் அதிகாரிக்கு மிரட்டல்!

தமிழகம்

நளினி பற்றியோ, 7 பேர் விடுதலை பற்றியோ பேசினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல்கள் வருவதாக, ராஜீவ் காந்தி  படுகொலையின்போது காயமடைந்த பெண் அதிகாரி புகார் அளித்திருக்கிறார்.

1991-ஆம் ஆண்டு நடந்த ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் அனுசுயா டெய்சி. 

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் சேர்ந்து, தற்போது மாநில செயலாளர் பொறுப்பில் உள்ளார்.

7 பேர் விடுதலை  குறித்து அவ்வப்போது விமர்சித்து வரும், அனுசுயா டெய்சிக்கு செல்போனில் கொலை மிரட்டல் வருவதாக, டிஜிபி அலுவலகம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுசுயா, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இனி நளினியை பற்றி பேசினாலோ, விடுதலை புலிகள்  தலைவரைப் பற்றி பேசினாலோ கொலை செய்து விடுவதாக, தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக கூறினார்.

தனக்கு கொலை மிரட்டல் விடுவிப்பவர் வெளிநாட்டு எண்ணிலிருந்து அழைத்து நளினி விடுதலை குறித்து பேட்டி அளித்தால் கழுத்தை அறுத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் சீமான், ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொன்றோம் என்று ஏற்கனவே கூறியுள்ளார். ஆகையால் அவரது ஆட்களும் எனக்கு தொடர்பு கொண்டு இந்த கொலை மிரட்டல் விடுக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று அனுசுயா தெரிவித்துள்ளார்.

மேலும் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமான வாய்ஸ் மெசேஜ் மூலமாக தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என காவல்துறையிடம் அனுசுயா கேட்டுக்கொண்டுள்ளார்.

வாட்ஸ்அப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ் மற்றும் அதற்குரிய எண்களை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளேன்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர், இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார், மேலும் விசாரணைக்குப் பிறகு எனக்கு போலீஸ் பாதுகாப்பு  அளிப்பதாக கூறியுள்ளார் என அனுசுயா தெரிவித்தார்.

கலை.ரா

கனடாவில் கோர விபத்து: இந்திய மாணவன் பலி!

ஷ்ரத்தா பாணியில் அடுத்த கொலை: உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த மனைவி!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *