ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார்!

Published On:

| By Selvam

Rajiv assassination case Santhan passed away

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சாந்தன் இன்று (பிப்ரவரி 28) காலமானார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சாந்தன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில்,  2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இலங்கையை சேர்ந்தவர் என்பதால், சாந்தன் தொடர்ந்து திருச்சி தமிழர் மறுவாழ்வு சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சாந்தன் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்தநிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட சாந்தன், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இன்று காலை 7.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி சாந்தன் காலமானார்.

இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

“கடந்த ஜனவரி 27-ஆம் தேதி கல்லீரல் செயலிழப்பு காரணமாக, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சாந்தன் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். கல்லீரல் செயலிழப்பு எதற்காக ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை அறிய, லிவர் பயாப்சி செய்ய அவர் மறுத்துவிட்டார்.

அவ்வப்போது சுயநினைவில்லாமல் இருந்தார். நேற்று இரவு அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சுயநினைவிழந்தார். விடியற்காலை 4 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

மீண்டும் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் காலை 7.50 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் உடற்கூராய்வுக்கு பிறகு, இலங்கை எடுத்து செல்வதற்கான சட்ட நடைமுறைகள் நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: கோடையிலும் உங்கள் சருமம் பளபளக்க…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

வேலைவாய்ப்பு : சென்னை துறைமுக ஆணையத்தில் பணி!

இன்ஸ்டாகிராமில் வரப்போகும் சூப்பர் வசதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel