தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தான் தெரிவித்த கருத்தில் தகவலின் ஆதாரத்தை ரஜினிகாந்த் உறுதி செய்து பொறுப்புடன் பேசியிருக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே 18ம் தேதி மொத்தம் 3000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தார்.
சமூக விரோதிகள் தாக்குதலால் வன்முறை!
இன்று தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து விமர்சித்த நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி சென்றார்.
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள்மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் துறையினர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியதால்தான் வன்முறை வெடித்தது. தமிழ்நாட்டில் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் மாறும்” என்று தெரிவித்தார்.
ரஜினியின் கருத்துக்கு அப்போது சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எந்த சமூக விரோதியையும் எனக்கு தெரியாது!
அதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தனது கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும், என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் சம்மன் அளிக்கப்பட்டது.
இதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த ரஜினிகாந்த், “ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். அப்படி எந்த சமூக விரோதியையும் எனக்கு தெரியாது” என்று தெரிவித்தார்.
ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும்!
இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில், “சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். நடிகர் ரஜினிகாந்த் சூழ்நிலைகளால் உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
பிரபலங்கள் ஒரு விஷயத்தைச் சொல்லும் போது பொதுமக்கள் அதனை கூர்ந்து கவனிப்பார்கள். நடிகர் ரஜினிகாந்த் போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். அவர் போன்ற பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டி20 உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் சாதனை… யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?
நீங்க எந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துறீங்க ? ராகுல் சொன்ன நச் பதில்!