நடிகர் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னை ஆயிரம் விளக்கு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இன்று (அக்டோபர் 1) அதிகாலை 5 மணி முதல் மூன்று மருத்துவர்களின் மேற்பார்வையில் முக்கியமான சிகிச்சை தொடங்கியிருக்கிறது.
வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், ரஜினிகாந்த் தற்போது தனது 171 ஆவது படமான கூலி படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூலி ஷூட்டிங் நடந்து வந்தது. அதில் ஒரு பகுதியை முடித்துவிட்டு செப்டம்பர் 28 ஆம் தேதி சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்,
ரஜினிக்கு கடந்த பத்து நாட்களாகவே சிறுநீர் கழிப்பதில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. அடிவயிறு சற்று வீக்கமாகி வலியும் இருந்திருக்கிறது. ரஜினிக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால், அவ்வப்போது மருத்துவ ஆலோசனைகளை தொடர்ந்து பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சிறுநீர் கழிப்பதில் அசௌகரியம், வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவர்களைத் தொடர்புகொண்டிருக்கிறார். ஷூட்டிங்கில் இருந்தபடியே மருத்துவர்கள் பரிந்துரைத்த முதல் கட்ட மருந்துகளை எடுத்துக் கொண்ட ரஜினி, அது தொடர்பாக மருத்துவர்கள் சொன்ன முக்கிய சோதனைகளையும் செய்துகொண்டிருக்கிறார்.
இந்த மருத்துவ சோதனைகளின் முடிவுகள் வந்த பிறகுதான், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட சிகிச்சைக்காக, நேற்று இரவு அப்பலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார் ரஜினி. கூடவே அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் சென்றார்.
ரஜினிக்கு என்ன சிகிச்சை நடக்கிறது என்று அப்பல்லோ வட்டாரத்தில் விசாரித்தோம்.
“மருத்துவப் பரிசோதனையில், ரஜினிக்கு ஏற்கனவே செய்யப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று மருத்துவர்கள் ஆராய்ந்தனர். சிறுநீர் கழிப்பதில் வலி ஏற்படவும், அடி வயிற்றுக்குக் கீழே வீக்கமாகவும் இருப்பதால் சிறுநீரக செயல்பாட்டை ஆய்வு செய்தனர்.
அதில்தான்.. ரஜினியின் சிறுநீரகத்தோடு தொடர்புடைய நரம்பில் சதை வளர்ந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து இதய சிகிச்சை நிபுணர்களும் நரம்பியல் நிபுணர்களும் ஆலோசனை நடத்தினார்கள். அந்த ஆலோசனைக்குப் பின்னரே அவர், அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்டார்.
ரஜினியை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ், இதய சிகிச்சை நிபுணர் விஜய் சந்தர் ரெட்டி, நரம்பியல் நிபுணர் டாக்டர் பாலாஜி (முன்னாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதையின் கணவர்) ஆகியோர் ரஜினியை கவனித்துக் கொள்கின்றனர்.
இதன்படி இன்று (அக்டோபர் 1) அதிகாலை 5 மணி முதல் ரஜினிக்கான சிகிச்சை தொடங்கியது,
அதாவது சிறுநீரகத்தில் இருந்து செல்லும் நரம்பில் ஏற்பட்டுள்ள சதை வளர்ச்சி அல்லது அடைப்பை சரி செய்யும் வகையில், ஸ்டன்ட் வைக்கும் சிகிச்சை தொடங்கியிருக்கிறது. ரஜினியின் தொடையைக் கிழித்து அதாவது மருத்துவ மொழியில் சொல்வதானால், தொடையில் ஓப்பன் செய்து இது தொடர்பான சிகிச்சை காலை 5 மணி முதல் 8 மணியைத் தாண்டியும் தொடர்ந்திருக்கிறது.
ஸ்டன்ட் என்பது ஒரு சிறிய குழாய் அல்லது கண்ணி. இதயத்துக்கு இரத்தம் வழங்கும் இரத்தநாளங்களுக்கு சிகிச்சையளிக்கவே இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஸ்டன்ட் சிகிச்சை என்பது இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல… நரம்பு தொடர்பான பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
சமீபத்தில் நடிகர் அஜீத்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது கூட மூளைக்கு செல்லும் நரம்பில் ஸ்டன்ட் வைக்கப்பட்டது. அதேபோல இப்போது ரஜினிக்கு சிறுநீரக நரம்பில் சிறு குழாய் என்ற ஸ்டன்ட் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் ஸ்டன்ட் என்றவுடனேயே இதயம் தொடர்பான பிரச்சினைக்கு மட்டும்தான் என்ற புரிதலின் அடிப்படையில் வேறு சில தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த சிகிச்சைக்குப் பின் ரஜினி சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். இதுதான் இப்போதைய ஸ்டேட்டஸ்” என்கிறார்கள்.
ரஜினி நலம் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி என விஐபிகள் முதல், சாதாரண ரசிகர்கள் வரை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
விரைந்து நலம் பெறட்டும் வேட்டையன்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
ஆறு நாள்களுக்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட சென்னை கடற்கரை: என்ன காரணம்?
வேலைவாய்ப்பு: TNJFU- வில் பணி!