கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டுங்களேன் இயக்குனர்களே?

Published On:

| By Aara

rajini vijay violence in cinemas

க.ராஜீவ் காந்தி (பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குனர்)

நான் கொலை பண்ணினாலும் ஜுவனைல் ஆக்ட் படி, சில வருஷம் தான் தண்டனை. அதுவும் மைனர் ஜெயில்ல. ரிலீஸ் ஆகும்போது தையல் மெஷின்லாம் கொடுப்பாங்க… – இது பார்த்திபனின் மகன் சித்து சொல்லும் வசனம்.

அதே கேரக்டர் கெட்டவர்களை கொன்றதால் அப்பா படும் அவஸ்தைகளை பார்த்து, ‘கையில ஆயுதம் இருந்தாலும் யூஸ் பண்ணக்கூடாது’ என்று சொல்கிறார். அடுத்த பாதியில் அந்த கேரக்டரே, ‘அப்பா பேச்சை கேட்டு யார் கதவை திறந்தாலும் ஈட்டியை எறிந்து கொல்லப் பார்க்கிறது. ஒரு கதையில் தான் எத்தனை முரண்கள்?

குழந்தைகளுடன் பார்க்க முடியாத ரஜினி, விஜய் படங்கள்

முன்பெல்லாம் பெரிய நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் படங்களை முதல் நாள் முதல் காட்சியே குழந்தைகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் செல்லலாம் என்று இருந்தது. கமல்ஹாசன் இதில் விதிவிலக்கு. 2 நாட்கள் காத்திருந்து படத்தை குடும்பத்துடன் பார்க்கலாமா என்பதை விமர்சனங்களை வைத்து அறிந்த பின்னர் செல்லலாம். ஆனால் சமீபகாலமாக ரஜினி, விஜய் படங்களுக்கே குழந்தைகளுடன் செல்ல முடியாத சூழ்நிலை.

ஜெயிலர் படத்தில் தலையை துண்டாக வெட்டி வீசுவதும் தலையில்லாத முண்டம் நிற்பதுமாக ஒரு காட்சி. வீசியது சூப்பர் ஸ்டார் ரஜினி. எதிர்த்து கேள்வி கேட்ட ஒரே ஒரு குற்றத்துக்காக ஒருவன் காதை வாளால் வெட்டி வீசுகிறார் அதே ரஜினி. லியோ படத்தின் சண்டைக்காட்சிகளில் எல்லாம் ரத்தம் தெறிக்கிறது.

இது ரசிகர்களுக்கான படம். அப்படித்தான் இருக்கும் என்று படக்குழு சொல்லிக்கொள்ளட்டும். சில ஆண்டுகள் முன்பு வரை அப்படித்தான் இருந்ததா? ஒரு பெரிய ஹீரோவுக்கு கமர்ஷியலாக வசூலிலும் விமர்சனத்திலும் வெற்றி பெற நல்ல திரைக்கதை தேவையாக இருந்தது. வெறும் சண்டைக்காட்சிகளும் ரத்தமும் இருந்தால் போதும் என்ற நிலை இல்லை.

முருகதாஸின் சாதுர்யம் ஏன் உங்களுக்கு இல்லை? 

விஜய் கைகளில் ஹீரோயிசம் என்ற பெயரில் கொடுக்கப்பட்டு வந்த கத்தி, அரிவாள் இன்னபிற ஆயுதங்களை விடுத்து புத்திசாலித்தனத்தை ஹீரோயிசமாக மாற்றியவர் முருகதாஸ்.

rajini vijay violence in cinemas

துப்பாக்கியும் கத்தியும் விஜய் ரசிகர்களைத் தாண்டி அனைத்து தரப்பினரும் இன்னும் கொண்டாடும் படங்கள். அந்த சாதுர்ய ஹீரோயிச காட்சிகளை அட்லீயால் தெறி, மெர்சல் படங்களில் தர முடியவில்லை. பிகில் படத்தில் கூட ஹீரோ சாதுர்யமானவன் இல்லாவிட்டாலும் 2 மாஸ் காட்சிகள் மூலம் இரண்டாம் பாதி திரைக்கதையை சுவாரசியப்படுத்தி இருப்பார்.

ஹீரோக்களின் ரசிகர்களைத் தாண்டி பொதுமக்கள் எதிர்பார்க்கும் ஹீரோயிசம் என்பது அதுதான். ஒரு அடியில் பறந்து விழும் அடியாட்களும் பதைபதைக்க வைக்கும் வன்முறையும் அல்ல. லோகேஷ் கனகராஜின் ஹீரோக்கள் எவருமே புத்திசாலிகள் அல்ல. அதாவது மூளையை சிறிது கூட பயன்படுத்துபவர்கள் அல்ல. பதிலாக அடித்து பறக்க விடுபவர்கள் மட்டும் தான். துப்பாக்கி ஜெகதீஷ், கத்தி கதிரேசனிடம் இருந்த புத்திசாலித்தனம் மாஸ்டர் ஜேடியிடமோ லியோ பார்த்திபனிடமோ இல்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மாஸ்டர், லியோ மட்டுமல்ல லோகேஷ் கனகராஜ் படைத்த மற்ற ஹீரோக்களிடமும் அப்படி எந்த சாதுர்யமும் வெளிப்படவில்லை. கைதி, விக்ரம் இரண்டுமே கதைகளில் வரும் கதாபாத்திரங்களை கனெக்ட் செய்த விதத்திலும் விறுவிறுப்பான திரைக்கதையாலுமே ரசிக்க வைத்தன. மாஸ்டரும் லியோவும் அனிருத் என்ற இசையமைப்பாளர் இல்லாவிட்டால் சில நிமிடங்கள் கூட அமர்ந்து பார்க்க முடியாத சூழல் தான்.

rajini vijay violence in cinemas

தமிழைத் தாண்டி வெற்றி பெற வன்முறைதான் வழியா?

தமிழ் சினிமாவில் மற்ற ஹீரோக்களை விட ரஜினி, விஜய் இருவருக்கும் வன்முறையையும் ஆபாச வார்த்தைகளையும் முகம் சுளிக்க வைக்கும் காட்சி, வசனங்களை தவிர்ப்பதில் பொறுப்பு இருக்கிறது. காரணம் இருவருக்கும் குழந்தை, சிறார், இளம் ரசிகர்கள் அதிகம். ஆனால் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும். குறிப்பாக தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ஹிட் அடிக்க வேண்டும். அதற்கு வன்முறை ஒன்றுதான் வழி என்று நினைத்து விட்டார்கள்.

லோகேஷ் கனகராஜ் என்பது லோகேஷ் கனகராஜ் மட்டுமே அல்ல. தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் அடித்தால் அதே போன்ற கதையை மற்ற ஹீரோக்களும் விரும்புவார்கள். அதாவது ரசிகர்களின் ரசனை பல்ஸ் தெரிந்து விட்டதாக நினைப்பு. அப்படி கைதி போல எடுக்கப்பட்டு தோல்வி அடைந்த படங்களே அரை டஜன் இருக்கும். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் டார்க் காமெடி மூலம் ஈர்த்தவர் நெல்சன். அவரும் இதுபோன்ற ரத்தமாயையில் சிக்கி பீஸ்ட்,ஜெயிலர் என்று 2 சுமாரான படங்களை கொடுத்தார்.

ஒரு பக்கம் ரசிகர்கள் வசூல் சாதனை என்று சொல்லிக்கொண்டாலும் நடிகர்களின் தீவிர ரசிகர்களைத் தாண்டி பொதுமக்களின் ரசனையை கவராத எந்த படமும் தோல்விப் படமே. இதனை நடிகர்கள் உணர்ந்தால் தான் நமக்கு தனி ஒருவன் மித்ரன், துப்பாக்கி ஜெகதீஷ், கத்தி கதிரேசன், அயன் தேவா போன்ற எல்லோரையும் ரசிக்க வைக்கும், காலம் கடந்து நிற்கும் கமர்ஷியல் கதாபாத்திரங்கள் கிடைக்கும்.

கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டுங்கள்! 

கடந்த ஒரு மாத செய்தித்தாள்களை படித்தாலே இளைய சமுதாயம் எந்த அளவுக்கு வன்முறைக்கு அடிமையாகி வருகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் சராசரி வயது 25க்கு கீழாக இருக்கிறது. திரைப்படங்களும் சமூகமும் ஒன்றையொன்று பிரதிபலிப்பவை என்பதை நாம் மறுக்க முடியாது.

rajini vijay violence in cinemas

தமிழ் சினிமா ஹீரோக்கள் தொடர்ந்து வன்முறையையும் ரத்தத்தையும் கொண்ட கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கதாபாத்திரங்களில் புத்திசாலித்தனத்தை வைக்க முடியாவிட்டாலும் திரைக்கதையிலாவது ரத்தத்தை மட்டுமே நம்பாமல் அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத விறுவிறுப்பான திரைக்கதையை அமைக்கலாம்.

லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களும் ரஜினி, விஜய் போன்ற ஹீரோக்களும் இதை உணர்வார்களா?

துருவ நட்சத்திரம் ட்ரெய்லர் வெளியானது!

ஊரப்பாக்கத்தில் சோகம்: ரயில் மோதி 3 சிறுவர்கள் பலி!

பாதி நேரம் என்னை பற்றியே பேச்சு: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share