நான்கு நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் ரஜினி
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று (அக்டோபர் 3) நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30 இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு மறுநாள் அக்டோபர் 1ஆம் தேதி காலை 5 மணி தொடங்கி சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் அவரது ரத்த நாளத்தில் அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கத்தீடர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ரஜினிக்கு இதயத்தில் இருந்து பிரியும் முக்கிய தமனியான பெருநாடியின் சுவரில் வீக்கம் இருந்ததால், டிரான்ஸ்கத்தீடர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும், மூத்த இருதய சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ், பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக சரி செய்துள்ளார் என்றும், ரஜினிகாந்த் நல்ல நிலையில் இருக்கிறார். இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிகிச்சை முடிந்து சிசியு எனப்படும் க்ரிட்டிகல் கேர் யூனிட்டில் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தார். ரஜினிகாந்த். நேற்று அப்பல்லோ மருத்துவமனையின் நான்காவது தளத்தில் உள்ள தனி கிச்சன், மினி லைப்ரரி, விசிட்டிங் லவுஞ்ச் என்ற சகல வசதிகள் நிறைந்த பிளாட்டினம் வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் அவர் வீடு திரும்பினார். எனினும் தற்போது வேட்டையன் பட ரிலீஸ் நிகழ்ச்சிகள், தற்போது நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு ஆகியவற்றில் பங்கேற்காமல், அடுத்த மூன்று வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டியது முக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த், நலமுடன் வீடு திரும்பியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கிச்சன் கீர்த்தனா : வரகரிசி கல்கண்டு பாத்
சென்னை மெட்ரோ 2 : நிதி ஒதுக்கி ஒப்புதல்!