போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் அபேஸ்!
நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து, ரூ.1 லட்சம் பணத்தை திருடிய நபரை, போரூர் போலீசார் கைது செய்தனர்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் இழந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ செலவிற்காக போண்டா மணிக்கு உதவி வழங்க வேண்டும் என்று நடிகர் பென்ஜமின் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து, மருத்துவமனையில் போண்டா மணியை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போண்டா மணியின் மருத்துவ செலவுகள் அனைத்தும் அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.
நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, வடிவேலு உள்ளிட்டவர்களும் போண்டா மணியின் மருத்துவ செலவிற்கு உதவினர்.
சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி, கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் போண்டா மணி சிகிச்சை பெற்ற போது, கடைகளுக்கு சென்று சாப்பாடு வாங்கி வருவது, மருந்துகள் வாங்கி வருவது என ராஜேஷ் பிரித்தீவ் என்ற நபர் போண்டா மணிக்கு பழக்கமாகியுள்ளார்.
போண்டா மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருடைய மனைவி மாதவி ராஜேஷிடம் மருந்து வாங்கி வர சொல்லி ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார்.
மாதவியின் அலைபேசிக்கு ஏடிஎம் கார்டிலிருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. பின்னர் ராஜேஷ் மருத்துவமனைக்கு வரவில்லை.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த போண்டா மணியின் மனைவி தேவி, போரூர் காவல் நிலையத்தில் ராஜேஷ் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போரூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், ராஜேஷ் விழுப்புரம் மாவட்டத்தில் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை உதவியுடன் ராஜேஷ் பிரித்தீவை போரூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வம்
சுருக்கு வலைக்கு தடை:மீனவர்கள் போராட்டம்!
இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி : தோல்விக்கு காரணம் சஞ்சு சாம்சனா?