பவர்கட் வந்தால் டிரான்ஸ்பர்:ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
வட கிழக்கு பருவமழை காலத்தில் மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மின்வாரிய பொறியாளர்களுக்கு ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருமழை காலகட்டம். இந்த காலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையின் போது அடிக்கடி மின்சார விநியோகம் தடைபடும்.
இந்தநிலையில் வட கிழக்கு பருவமழையின் போது மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 12 மண்டல தலைமை பொறியாளர்கள், 44 மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுடன் மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பராமரிப்பு பணிகள் நிலவரம், மின் கட்டணம் வாயிலாக வருவாயை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேஷ் லக்கானி அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி, ” வட கிழக்கு பருவமழையின் போது மின்தடை ஏற்படுவதை தவிர்க்க மின் சாதனங்கள் முழுமையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி மின் தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக பணியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.
ஓவ்வொரு பிரிவு அலுவலகத்திலும் உள்ள மின் இணைப்புகளுக்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்திற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலாகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளில் மின் விநியோகத்தை துண்டிப்பதுடன் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
செல்வம்
புதிய நில வழிகாட்டி மதிப்பு : உங்கள் ஊரில் எவ்வளவு தெரியுமா?
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!