ராஜேஷ் தாஸ் வழக்கு: காலையில் கைது.. மாலையில் ஜாமீன்- என்ன நடந்தது?
கேளம்பாக்கம் காவல்துறையினரால் இன்று (மே 24) கைது செய்யப்பட்ட ராஜேஷ் தாஸ் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் காவல் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜேஷ் தாஸை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.
பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா அவரை பிரிந்தார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார்.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய ராஜேஷ் தாஸ், கடந்த 18-ந்தேதி பீலா வெங்கடேசன் தங்கியிருந்த தையூர் பங்களா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் காவல்துறையினரிடம் பீலா வெங்கடேசன் புகார் அளித்தார்.
அதில், ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி உள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், வீட்டு காவலாளியை தாக்கிய வழக்கில் சென்னை பனையூரில் உள்ள வீட்டில் வைத்து ராஜேஷ் தாஸை காவல்துறையினர் இன்று காலையில் கைது செய்தனர். இதனையடுத்து ராஜேஷ் தாஸை செங்கல்பட்டு திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது ராஜேஷ் தாஸ் நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து அவரை அழைத்து வந்த வாகனத்தில் அமர வைத்தனர். தொடர்ந்து திருப்போரூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ராஜேஷ் தாஸ் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போலீஸ் Vs போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காண்க: அன்புமணி வலியுறுத்தல்!
சீட் பெல்ட் அணியவில்லை: நெல்லை அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம்!