ராஜ ராஜ சோழனின் சதயவிழாவை ஒட்டி விவசாயம் செழிக்கவும், மக்கள் பட்டினி இல்லாமல் வாழவும் 48 வகையான பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மாமன்னன் ராஜராஜ சோழன் 1037-வது சதயவிழா நேற்று(நவம்பர் 2) தொடங்கியது.
2-வது நாள் விழாவான இன்று காலை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு சார்பில் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராஜராஜன் மீட்டெடுத்த தேவார, திருவாசக பாடல்களின் ஓலைச் சுவடிகள், பெரிய கோயிலில் இருந்து யானை மேல் வைத்து, நாதஸ்வரம், செண்டை மேளம் முழங்க எடுத்துச் செல்லப்பட்டது.
தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட விழா குழுவினர் ஊர்வலமாக சென்று ராஜராஜ சோழனின் சிலையை அடைந்ததும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பட்டாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து கோவிலில் பெருவுடையார் , பெரியநாயகி அம்மனுக்கு பால், நெய், தேன், மஞ்சள், விபூதி, பசுந்தயிர், பஞ்சாமிர்தம், திரவியப்பொடி, சாம்பிராணி தைலம், பலாச்சுளை, மாதுளை முத்து, சாத்துக்குடி சாறு, எலுமிச்சை பழச்சாறு, இளநீர், பன்னீர் உள்பட 48 வகையான பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதினம் தலைமையில் நடந்த இந்த பேரபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த பேரபிஷேகத்தின் போது திருமுறை தேவாரப் பாடல்கள் தமிழில் பாடப்பட்டது.
திருவிசைப்பாவும் பழம் பெரும் கருவியான தமிழரின் புகழ் பெற்ற இசைக்கருவியான யாழ் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பெருந்தீப வழிபாடு நடைபெற்றது.
ராஜ ராஜ சோழனின் சதயவிழாவை அரசு விழாவாக நேற்று(நவம்பர் 2) அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலை.ரா
குஜராத் சட்டமன்றத் தேர்தல் அட்டவணை!
அபராதம் செலுத்தாவிட்டால் … போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!