மாமன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி புரிந்து, தஞ்சையில் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள், அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழர்களின் கட்டிடக் கலையை உலகறியச் செய்த மாமன்னன் ராஜராஜனின் 1037 வது ஆண்டு சதயவிழா விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது.
மங்கள இசையுடன் துவங்கி, அப்பர் குழுவினரின் தேவார திருவாசக இசையுடன் நடைபெற்று வருகிறது.
2 நாள் விழாவில் ராஜராஜன் குறித்த கவியரங்கம், பட்டிமன்றம், ராஜராஜனின் ஆட்சித்திறன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
2 ம் நாளாக நாளை(நவம்பர் 3) காலை ராஜராஜ சோழனின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
இந்தநிலையில் ராஜ ராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சதயவிழாவை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனவே அந்த கோரிக்கைகளை ஏற்று ராஜ ராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், தஞ்சாவூரில் உள்ள ராஜ ராஜன் மணிமண்டபம் மேம்படுத்தப்பட்டு பொலிவூட்டப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற திமுக எடுத்த முடிவு!
மழை பாதிப்பு : வீடியோ காலில் பொதுமக்களிடம் கேட்டறிந்து உறுதியளித்த முதல்வர்!