ரயில்வே போட்டித் தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 காலியிடங்களை நிரப்ப குரூப் ‘டி’ தேர்வு மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இதில், முதல்கட்ட தேர்வு முடிந்துள்ள நிலையில், வடமத்திய ரயில்வே (அலகாபாத்), வடமேற்கு ரயில்வே (ஜெய்ப்பூர்), தென் கிழக்கு மத்திய ரயில்வே (பிலாஸ்பூர்) ஆகியவற்றுக்கான இரண்டாவது கட்ட தேர்வு கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தெற்கு ரயில்வே (சென்னை), வடக்கு ரயில்வே (டெல்லி), வடகிழக்கு எல்லை ரயில்வே (கவுகாத்தி), கிழக்கு கடற்கரை ரயில்வே (புவனேஸ்வர்) ஆகியவற்றுக்கு மூன்றாம் கட்ட தேர்வு வரும் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இந்த குரூப் டி தேர்வு கணினி அடிப்படையில் காலை, மதியம், மாலை என மூன்று ஷிப்டுகளில் நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். இருப்பினும், தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் பலருக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை தமிழக அரசு தடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செப்டம்பர் 5) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி நடைபெறும் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700.கி.மீ.க்கும் கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டும்; 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்து தங்க வேண்டும். இது சாத்தியமல்ல.
700.கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்; தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும்; மாணவர்களின் தேர்வு எழுதும் திறனை கெடுக்கும். இது கூடாது. மாணவர்கள் இயல்பாக தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வே தேர்வு வாரியத்தின் கடமை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்