சென்னையில் பல இடங்களில் இன்று (ஜூன் 5) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று (ஜூன் 5) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுத்தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
15 மாவட்டங்களில் கனமழை
“தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ. வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை (ஜூன் 6) கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
இன்று முதல் ஜூன் 9ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும் அல்லது இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று (ஜூன் 5) சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
இன்றும், நாளையும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ.வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.” எனத் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை
இந்நிலையில், இன்று (ஜூன் 5) காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், பிற்பகலுக்கு மேல் சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னையில் நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், தியாகராய நகர், கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயில், போரூர், ஆலப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், வளசரவாக்கம், ராமாபுரம், திருவேற்காடு, வேலப்பன்சாவடி, காட்டுப்பாக்கம், பூந்தமல்லி, குமணன்சாவடி, நசரத்பேட்டை, மாங்காடு, குன்றத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா கூட்டணி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மீட்கும் – ஸ்டாலின்
எளிய மக்களின் வாழ்வைச் சுவாரஸ்யமாகச் சொன்ன ‘காக்கா முட்டை’