உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தமிழகம்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 3) வெளியிட்ட அறிவிப்பில், “டிசம்பர் 5ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.

பிறகு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதி வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (டிசம்பர் 3) முதல் அடுத்த 5 தினங்களுக்குத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எங்கெங்கு மழை

இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

டிசம்பர் 5 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 6 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 7 ஆம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இலங்கை கடலோர பகுதிகள் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெதர்மேன் அப்டேட்

இந்நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான் காற்றழுத்த தாழ்வுப் பகுதியைக் கணிக்க இன்னும் நேரம் இருக்கிறது எனவும் டிசம்பர் 2 ஆம் வாரம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மோனிஷா

மாமனும் மச்சானும்… ஆய்வுக் கூட்டத்தில் எம்.ஆர்.கே.வை கலாய்த்த நேரு

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதா? தலைமை ஆசிரியருக்கு சிறை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *