தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்டு 21) இரவு சென்னை மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.
இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 21 மற்றும் ஆகஸ்ட் 22 ல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னை மாநகரின் பல்வேறு இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, ஆவடி, நந்தனம், சைதாப்பேட்டை, தி.நகர், வடபழனி, கோடம்பாக்கம், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம், மந்தவெளி, மயிலாப்பூர், கிண்டி, அடையாறு, ஆதம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம் , சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த வருடம் பெய்த மழையின் போது சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இந்த முறை அதுபோல ஆகிவிடக் கூடாது என்பதற்காக மழை நீர் வடிகால் வாரிய பணிகள் வேகமாக நடைபெறுவதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்திருந்தார்.
மாநகராட்சியின் மழை நீர் வடிகால் பணிகள் சரியாக நடந்திருக்கிறதா என்பது மழை தொடர்ந்தால், தெரிந்துவிடும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்!