காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று (ஜூலை 24) மாலை 6 மணி முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது.
ஒரு வார காலமாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதனால் சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே வெதர்மேன் பிரதீப் ஜான், “தென்சென்னை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, சிறுசேரி, ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேகமாக நகரும் மேகங்கள் வலுப்பெற்று பருவமழை பெய்யும். இடி மின்னலுடன் கூடிய லேசான மழை மற்றும் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோனிஷா