சென்னையில் மழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்: உதயநிதி பேட்டி!

Published On:

| By Kavi

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 12) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டு, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என்று IMD (India Meteorological Department) கணித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காலை 7.30 மணி நிலவரப்படி பல மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. சராசரியாக சென்னையில் 3.50 செ.மீ. தென் சென்னையில் சராசரி 5.5 செ.மீ. பெருங்குடியில் 7.35 செ.மீ., மழை பெய்திருக்கிறது.

அதேபோல, செங்கல்பட்டில் 1.06 செ.மீ., திருவள்ளூரில் 0.5 செ.மீ., காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ. உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்திருக்கின்றது.
சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.194 மோட்டார் பம்புகள், 158 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 524 ஜெட் ரோடிங் (Jet Rodding ) இயந்திரங்களும் தயாராக உள்ளன.

இது அக்டோபர் மாதம் பெய்த மழைக்கு பயன்படுத்தி இருந்ததை விட 21 சதவிகிதம் அதிகமாக்கி இருக்கின்றோம். அதேபோல அக்டோபர் மழை அனுபவத்தின் அடிப்படையில், கண்காணிப்பு அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் மோட்டார்களை தயார் செய்துள்ளோம்.

சென்னை மாநகராட்சி சார்பில், 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர, மற்ற 21 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து போய்க் கொண்டிருக்கிறது.

அதுவும், ரயில்வே மேம்பாலம் பணியை மேற்கொள்வதற்காக கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

காலை 9:30 மணி வரை எந்த பகுதியிலும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி குழு, அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் இப்படி அனைவரும் களத்தில் இருக்கின்றோம்.
கால்வாய்களில் தூர்வாரும் பணிகளும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

சமூக ஊடகங்களில் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு உடனுக்குடன் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரியளவில் புகார்கள் ஏதும் வரவில்லை. சென்னை மாநகராட்சி சார்பில் மொத்தம் 22,000 நபர்கள் பணியில் இருக்கின்றனர்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்

பிரியா

எடப்பாடி வடிக்கும் முதலைக்கண்ணீர்… முதலையே தோற்றுவிடும் : தங்கம் தென்னரசு பதிலடி!

கஸ்தூரி முன்ஜாமீன் மனு: தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share