தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (24-10-2024) வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான டானா வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (25.10.2024) அதிகாலை 01.30 முதல் 03.30 மணிக்கு இடையே வடக்கு ஒரிசா கடற்கரையில், பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒரிசா) பகுதிகளுக்கு அருகே தீவிர புயலாகவே கரையை கடந்தது.
தற்போது, தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை குறித்து இன்று (அக்டோபர் 25) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ 25.10.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26.10.2024 அன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
27.10.2024 31.10.2024 : தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ராணுவ வீரர்கள் கொண்டாடும் ‘அமரன்’ !
30 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த சுப்பையாவுக்கு ரத்தன் டாடா எழுதிய உயில்!