தென்மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (டிசம்பர் 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தற்போது தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்த மழையை விட இது இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
தொடர் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளதாக தென்மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் இன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகும் புதுச்சேரி!