கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவம்பர் 15) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
இந்த்நிலையில், கன மழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ரவுடி கருக்கா வினோத் மீது என்ஐஏ வழக்குப்பதிவு!
கனமழை எதிரொலி: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர கடிதம்!