ஒடிசாவில் விபத்துக்கு உள்ளான ரயில்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை என்று ரயில்வே எஸ்.பி பொன்ராம் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று (ஜூன் 3) செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே எஸ்.பி.பொன்ராம் பேசுகையில்,
“ரயிலில் மொத்தமாக எத்தனை பேர் பயணித்தார்கள், அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. சென்னைக்கு வரவிருந்த 45 பேர் காயமடைந்திருப்பதாக மட்டும் தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல்கள் இதுவரை வரவில்லை.
எங்களுக்கு கிடைத்த பயணிகளின் தகவல்களை வைத்து நாங்களே தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம்.
இதுவரைக்கும் கிடைத்த தகவலின்படி சென்னைக்கு வருவதற்கு 132 பேர் முன்பதிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை உயருவதற்கும் வாய்ப்பு உள்ளது.
மொத்தம் 890 பேர் முன்பதிவு செய்திருக்கும் நிலையில் முன்பதிவு இல்லா பெட்டிகளிலும் ஏராளமானவர்கள் பயணித்திருப்பார்கள். ஒரு ரயிலில் குறைந்தபட்சம் 5 முன்பதிவு இல்லா பெட்டிகள் இருக்கும். ஒரு பெட்டியில் 65 பேர் பயணிக்கலாம்.
ஆனால் முன்பதிவு இல்லா பெட்டிகள் என்பதால் அதிகளவிலான எண்ணிக்கையில் மக்கள் பயணித்திருக்க வாய்ப்பிருக்கிறது.
இப்போதைக்கு இங்கு கட்டுப்பாட்டு அறையில் ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு தேவையான தகவல்களை அளித்து தொடர்பு கொள்வதற்குத் தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
நாளை காலை சென்னை வரும் சிறப்பு ரயிலில் வருபவர்கள், அவர்களது உறவினர்களை எளிதாக கண்டறிவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னை வரும் பயணிகளுக்காக மருத்துவ குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மோனிஷா
மூன்று ரயில்கள்… மூன்று தடங்கள்: கொடூர விபத்து நடந்தது எப்படி?
உயர் மட்டக் கூட்டம்: ஒடிசா விரையும் பிரதமர் மோடி