நாக்குக்கு ருசியா தேடித் தேடி சாப்புடுறவங்க லிஸ்ட்ல வெங்காய தோசைக்கும் இடமுண்டு. இந்த ராகி வெங்காய தோசையில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. எலும்பு தேய்மானம் இருக்காது. அனைவருக்கும் ஏற்ற சிறந்த சிற்றுண்டி இது.
என்ன தேவை?
ராகி மாவு – ஒரு கப்
தோசை மாவு அல்லது கோதுமை மாவு – அரை கப்
பெரிய வெங்காயம் – 2
உப்பு – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, நன்கு வதக்கிவைத்துக்கொள்ளவும். ராகி மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தோசை மாவோடு கலந்து, தோசை தவாவை அடுப்பில் வைத்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கும்போது, தோசையின் நடுவே வதக்கிய வெங்காயத்தை வைத்து, சுட்டுஎடுக்கவும்.
குறிப்பு: முதல் நாள் இரவேகூட, ராகி மாவைக் கரைத்து வைத்து, மறுநாள் உபயோகப்படுத்தலாம். ஆனால், காலையில்தான் தோசை மாவைச் சேர்க்க வேண்டும். தோசை மாவுக்குப் பதிலாக, கோதுமை மாவு உபயோகப்படுத்துகிறீர்கள் என்றால், அதையும் தண்ணீர் விட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து, ராகி மாவுடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: புதினா ஜூஸ்
கிச்சன் கீர்த்தனா: மாதுளை லஸ்ஸி