ஃபாஸ்ட் புட் உலகில் பாரம்பரியமான உணவு வகைகளை மறந்து வருகிறோம். அவற்றில் ஒன்று இந்த ராகி கொழுக்கட்டை. இது வயிற்றுப்புண்ணைச் சரிசெய்யும். பல் மற்றும் எலும்பு உறுதிக்கு உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
ராகி மாவு, இடியாப்ப மாவு – தலா 100 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் ராகி மாவை லேசாக வறுத்து எடுக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும். பாத்திரத்தில் தாளித்த கலவை, ராகி மாவு, இடியாப்ப மாவு, தேங்காய்த் துருவல், உப்பு, தேவையான தண்ணீரைச் சேர்த்துக் கொழுக்கட்டை மாவுப் பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுத்தால், சத்தும் சுவையும் நிறைந்த கொழுக்கட்டை ரெடி.
கிச்சன் கீர்த்தனா: காராமணி ராகி சேவை