இன்று பலரால் விரும்பி சாப்பிடும் உணவாகி வருகிறது சிறுதானிய உணவுகள். சிறு தானியங்களில் நம்முடைய பாரம்பர்ய உணவுகளான இட்லி, சுண்டல், பாயசம், கூழ் வகைகளைச் செய்வதுடன் லட்டும் செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
ராகி மாவு- அரை கப்
கோதுமை மாவு – அரை கப்
நெய்- 400 கிராம்
சர்க்கரை இல்லாத பால்கோவா – 100 கிராம்
பொடித்த சர்க்கரை – 200 கிராம்
பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு- 50 கிராம்
பொடித்த ஏலக்காய் – 4
பொடித்த பட்டை – 4 உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாதாம் பருப்பைப் பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பவுலில் கோதுமை மாவு, ராகி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அதில் ஒரு துளி அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தண்ணீர் விட்டு பிசைந்துகொள்ளவும்.
இவற்றை, சப்பாத்திக்கு உருட்டுவதுபோல சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் இந்த உருண்டைகளைப் சேர்த்து, மொறுமொறுவென, பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.
பொரித்த உருண்டைகளை, ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். இதை ஒரு பவுலில் எடுத்து வைத்து அத்துடன் ஏலக்காய்த்தூள், பட்டைத்தூள், பொடித்த சர்க்கரை, சர்க்கரை இல்லாத பால்கோவா, பாதாம் பருப்பு இவற்றை எல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்றாகப் பிசைந்து லட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.