பகடிவதை அன்றும் இன்றும்!

சிறப்புக் கட்டுரை தமிழகம்

நா.மணி

மாணவர் பேரவைத் தேர்தல்கள் தடை செய்யப்பட்ட உடனேயே, பகடிவதை தன் பகட்டை காட்டத் தொடங்கியது. மாணவர் பேரவைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்ட அடுத்த ஆண்டே, “முதலாண்டு மாணவர்களுக்கு மரியாதை தெரியவில்லை. மூத்த மாணவர்களை மதிக்க தெரியவில்லை. அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்” எனப் பேசத் தொடங்கினர்.

அதற்கு அடுத்த ஆண்டே, ஓர் இரவு நாளில், விடுதிக் காப்பாளர் அனுமதியோடு, முதலாண்டு மாணவர்களை ஒரே அறையில் கூட்டினர்.

அதே விடுதியில், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர் தலைவரும் தங்கியிருந்தார். அவரிடமும் அனுமதி பெற்றே இந்தக் கூட்டம் நடந்தது. “மூத்த மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுத் தரப் போகிறோம். கல்லூரி பழக்க வழக்கங்களை கற்றுத் தரப் போகிறோம்” என்பது தான் அந்தக் கூட்டத்தின் நோக்கம்.

அன்று இரவு, முதலாண்டு மாணவர்கள் அனைவரும் பகடிவதையின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். “கல்லூரி என்றால் இப்படித்தான் இருக்கும். நாம் தான் அனுசரித்து போக வேண்டும். இன்னும் சிறிது நாட்களில் எல்லாம் சரியாகப் போய்விடும்” என்று நினைத்துக் கொண்டு, அவரவர் அறைக்கு சென்று விட்டனர். ஒரே ஒரு மாணவன் மாத்திரம் இந்த பகடிவதை கண்டு பொங்கி எழுந்தார். மறுநாள் காலையில், நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து, புகார் கடிதம் சமர்ப்பித்து விட்டார்.

காவல் கண்காணிப்பாளர் தனது பணிகளை முடுக்கி விட்டார்.ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உளவுப் பிரிவினரும் களத்தில் இறங்கினர். உளவு பிரிவினர் விடுதிக்கு வந்து முதல் கட்ட விசாரணையை தொடங்கினர்.

அதில் பகடிவதை நடந்ததை ஊர்ஜிதம் செய்து கொண்டனர். அடுத்த‌ கட்ட விசாரணைக்கு காவல் ஆய்வாளர் நேரில் வருவார். முதலாம் ஆண்டு மாணவர்களிடம் விசாரணை நடத்துவார். இதர மாணவர்களையும் அழைத்துப் பேசுவார். பகடிவதையில் ஈடுபட்டது உறுதியானால் வழக்கு பதிவு செய்யப்படும். தவறு செய்த மாணவர்களுக்கு தண்டனை நிச்சயமாக கிடைக்கும் என்று கூறிவிட்டு சென்றனர்.‌

முதலாம் ஆண்டு மாணவர்கள் முதல் முதுகலை பட்ட வகுப்பு மாணவர்கள் வரை அதிர்ச்சியில் உறைந்து போயினர். பகடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் கூட வருத்தத்தில் ஆழ்ந்தனர். ஏதோ நடந்தது நடந்து விட்டது. கல்லூரியை விட்டு அனுப்பி அல்லது சிறைக்கு அனுப்பி என்ன செய்யப் போகிறோம். இவர்கள் தான் தவறு செய்து விட்டார்கள். இவர்கள் அப்பா அம்மா என்ன பாவம் செய்தனர். இப்படி பலவாறாக விடுதியில் பேசிக் கொண்டே இருந்தனர்.

பகடிவதை வரலாறு

விடுதியே இழவு விழுந்த வீடு போல் ஆகிவிட்டது. விடுதியில் இருந்த எல்லா மூத்த மாணவர்கள் மீதும், அந்த முதலாம் ஆண்டு மாணவர் வழக்கு பதிவு செய்யவில்லை. தன்னை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கிய ஆறு மாணவர்கள் பெயரை மாத்திரம் எழுதிக் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும் படி கோரியிருந்தார். அந்த ஆறு மாணவர்களும் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். விடுதிக் காப்பாளர், மாணவர் தலைவர் ஆகியோர் எப்படியாவது தங்களை காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடினர். முதலாம் ஆண்டு மாணவர்கள் காலில் கூட விழுகிறோம். அவர்களிடம் பேசி எங்களைக் காப்பாற்றுங்கள் எனக் கதறினர்.

தவறிழைத்த ஆறு பேரும் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரே வழிதான் இருந்தது. காவல் ஆய்வாளர் வந்து விசாரணை செய்யும் போது, அனைத்து முதல் ஆண்டு மாணவர்களும் “முதலாண்டு மாணவர்கள் அறிமுகம் கூட்டம் மட்டும் நடந்தது. அதில் மூத்த மாணவர்கள் யாரும் பகடிவதையில் ஈடுபடவில்லை. கடிதம் கொடுத்த மாணவன் மிகைப்படுத்தி கூறுகிறான்.” என்று சாட்சி சொல்ல வேண்டும். எழுதித் தர வேண்டும். இந்த சாட்சியங்கள் காவல் ஆய்வாளர் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்க வேண்டும்.

இது ஒன்று தான் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் தப்பிக்க வழிமுறை. மூத்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருவரையும், விடுதியிலும், கல்லூரியிலும் தனித் தனியே சந்தித்தனர். மீண்டும் மீண்டும் சந்தித்தனர்.

மன்னிப்பு கோரினார். இனிமேல் படித்து முடித்து செல்லும் வரை முதலாண்டு மாணவர்களிடம் எந்த விதத்திலும் முட்டிக் கொள்ள மாட்டோம். இதனை எல்லோர் முன்னிலையில் சொல்லி உறுதி ஏற்கிறோம். எழுதித் தருகிறோம். எங்களை தண்டனையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினர்.

முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருவராக மனம் இறங்கி வந்தனர். ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் தவறு செய்து விட்டார்கள். இப்போது திருந்தி மன்னிப்பு கேட்கிறார்கள்.அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கோருகிறார்கள். மூத்த மாணவர்கள் என்றும் பாராமல் மன்னிப்பு கேட்கவும், எழுத்துப் பூர்வமான மன்னிப்பு, உறுதி மொழி தரவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். காலில் விழவும் தயாராக இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? எனவே, காவல் ஆய்வாளர் விசாரணைக்கு வரும் போது, பகடிவதை ஏதும் நடைபெறவில்லை என்று ஒட்டு மொத்த முதலாண்டு மாணவர்களும் சொல்லத் தயாராகி விட்டனர்.

குற்றம் சாட்டிய மாணவனிடம், முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் சென்று, “ஏதோ நடந்தது நடந்து விட்டது. அந்த ஆறு பேரும் மனம் வருந்தி திருந்தி மன்னிப்பு கேட்கிறார்கள். இனி எப்போதும் தவறு செய்ய மாட்டோம். பகடிவதையில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்கிறார்கள். அதற்கு விடுதிக் காப்பாளர் மாணவர் பேரவை தலைவர் ஆகியோர் உறுதி அளிக்கின்றனர். எனவே, நீ கொடுத்த புகார் மனுவை, திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று கோரினர்.

காவல் கண்காணிப்பாளரிடம் ‌முறையீட்டு மனு கொடுத்த முதலாம் ஆண்டு மாணவன், தனது மனுவை வாபஸ் பெற மறுத்து விட்டார். அந்த ஆறு பேருக்கும் தக்க தண்டனை பெற்றுத் தருவதில் உறுதியாக இருந்தார். காவல் ஆய்வாளரின் விசாரணை நாள் நெருங்கியது. முதலாம் மாணவர்கள் மூத்த மாணவர்கள் விடுதிக் காப்பாளர் என அனைவரையும் தனித் தனியே காவல் ஆய்வாளர் சந்தித்தார். முதலாம் ஆண்டு மாணவர்களிடம் விசாரிக்கும் போது, புகார் அளித்த மாணவன் தவிர மீதமுள்ள அனைவரும், தவறிழைத்த தங்கள் மூத்த மாணவர்கள் அதிக பட்ச மன்னிப்பை கோருவதால், கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவதை தவிர்த்து, எந்தவித நடவடிக்கைக்கும், மூத்த மாணவர்கள் ஒப்புக் கொள்வதாலும், அவர்களை முதலாம் ஆண்டு மாணவர்கள் மன்னிக்க தயாராகி, பொய் சாட்சியம் அளிக்க தயாராகி விட்டனர்.

காவல் ஆய்வாளரிடம் “முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிமுகக் கூட்டம் மட்டுமே நடந்தது. பகடிவதை ஏதும் நடைபெறவில்லை.” என ஏகமனதாக சாட்சி கூறியதோடு, கடிதமாகவும் எழுதிக் கொடுத்தனர். குற்றம் சாட்டிய மாணவர் இதர மாணவர்களை பார்த்து. “டேய். பொய் சொல்லாதீர்கள். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது” என்று காவல் ஆய்வாளர் முன்னிலையில் சத்தம் போட்டார். “நீதான் பொய் சொல்கிறாய். உனக்குத்தான் சோறு கிடைக்காது” என்று இவர்கள் பதிலுக்கு கத்தினார்கள்.

காவல் ஆய்வாளர் உண்மையைப் புரிந்து கொண்டார். அதேசமயம், தவறு நடந்து இருந்தாலும், ஒட்டுமொத்த முதலாம் ஆண்டு மாணவர்களும் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை காக்க முன்னுக்கு வந்திருப்பதன், நோக்கம் என்ன என்று அறிய விரும்பினார். குற்றம் சாட்டிய மாணவர் தவிர்த்து இதர மாணவர்களை கூட்டி உண்மைக் கேட்டு அறிந்தார்.

இறுதியில், பகடிவதை ஏதும் நடைபெறவில்லை. குற்றம் சாட்டிய மாணவனுக்கும் குற்றம் சாட்டப்பட்ட மாணவனுக்கும் ஏதோ முன் பகை இருக்கிறது. அதனைத் தீர்த்துக் கொள்ள இதனை ஓர் ஆயுதமாக பயன்படுத்த முயல்கிறார் என்ற ரீதியில் பிரச்சினையை முடித்து வைத்து விட்டார். குற்றம் சாட்டிய மாணவர் தனக்கு பெரிய அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதி விடுதியில் இருந்து நின்றுவிட்டார்.

ஏனிந்த வரலாறு? மாணவர் பேரவைத் தேர்தல்கள் பகடிவதை போன்ற மனித வதையை தனது இயல்பில் இல்லாமல் செய்திருந்தது. அதேசமயம், தேர்தல்கள் போன்றவை முடிவுக்கு வந்திருந்தாலும் அதன் வழியாக கிடைத்த தைரியம், ஊக்கம் அவர்களுக்கு பயன்பட்டது. பகடிவதை அறிமுகம் ஆனாலும் அதனை எதிர்த்து நிற்கும் திறன் ஆற்றல் இருந்தது. பகடிவதை செய்யப்பட்ட அன்றே அது முடிவுக்கு கொண்டுவரும் காலமாக அது இருந்தது. அதனை முளையிலேயே கிள்ளி எறியும் பக்குவம் இருந்தது.

லஞ்சமும் பகடிவதையும்

பகடிவதையை தடுக்கும் அதேசமயம் ஒற்றுமையோடு அனைவரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் முன்பிருந்த மாணவர்களிடம் இருந்தது. தற்போதைய நிலையில் பகடிவதையை தடுக்க பல்கலைக்கழக மானியக் குழு முதல் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வரை அரும்பாடு பட்டாலும், அவற்றை தடுக்க இயலவில்லை. கடுமையான தண்டனை சட்டங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் பகடிவதையை தடுக்க இயலவில்லை. காரணம் என்ன?

எவ்வளவு கடுமையான தண்டனை சட்டங்கள் இருந்தாலும் யாரும் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற தைரியம், தவறு செய்வோருக்கு இருக்கிறது. ஒரு வேளை ஏதோவொரு மாணவன் தப்பித் தவறி புகார் அளித்து விட்டால், சட்டங்கள் கடுமையாக இருக்கிறது, தண்டனைகள் கடுமையாக இருக்கிறது, எதிர்காலம் பாழ்பட்டு விடும், என்று குற்றம் இழைத்த மாணவனை தண்டனையிலிருந்து காப்பாற்றுவதில் எல்லோரும் குறியாக இருக்கிறார்கள். சட்டப் படியான தண்டனைகளை கொடுப்பதற்கு பதிலாக கல்வி நிறுவனங்கள் அவர்களாகவே ஒரு தண்டனையை நிர்ணயம் செய்து விடுகிறார்கள்.

மிகப் பெரிய தவறுகளுக்கு, மிகச் சிறிய தண்டனைகள், எங்கோ, எப்போதோ, ஒருவருக்கு கிடைப்பதால், பகடிவதைக்கு உட்படும் மாணவர்கள், புகார் தெரிவிக்க விரும்புவதில்லை. அப்படியே தெரிவித்தாலும் எளிதில் தப்பி விடலாம் என்ற சிந்தனை பகடிவதை நீடித்து நிலைக்க வழி செய்கிறது. லஞ்ச ஒழிப்பு துறை இருக்கிறது. ஆனால் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டுதானே இருக்கிறது. எங்கோ எப்போதோ ஓரிருவர் லஞ்ச ஒழிப்பில் சிக்குவதால், பெரும்பான்மையானவர்கள் அது பற்றி பயம் இன்றி துணிச்சலாக தவறு செய்கிறார்கள்.

அது போன்றதே பகடிவதையும். கடுமையான சட்டங்கள் தண்டனைகள் சாதிக்க முடியாத பிரச்சினைகளை பகடிவதை போன்ற உயிர் வதையை, மாணவர் பேரவைத் தேர்தல்கள், தோன்றவே விடாமல் தொலைத்துக் கட்டி இருந்தது. அன்றைய மாணவர் பேரவைத் தேர்தல்கள் இன்னும் என்னவெல்லாம் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது?

அடுத்த வாரம் காண்போம்.

கட்டுரையாளர் குறிப்பு

Ragging then and now by Professor N Mani

நா.மணி

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.

முந்தைய கட்டுரைகள்

பகடிவதையை (Ragging) வேர்விடச் செய்யாத மாணவர் பேரவை தேர்தல்கள்!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு : தேஜஸ்வி யாதவ் கருத்து!

அதிமுக பாஜக கூட்டணி முறிவு: சந்தேகம் கிளப்பும் அழகிரி

இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் செயல்படாது!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *