சென்னை நொச்சிக்குப்பத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த சென்ற கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் அருகில் உள்ள நொச்சிக்குப்பத்தில் சுனாமி 18-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவரது இனோவா காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் பட்டினப்பாக்கம் இணைப்பு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரில் சென்னையில் இருந்து மேல்மருத்துவருக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சுற்றுலா வேன் அவரது வாகனத்தின் முன் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இனோவா காரில் பயணித்த ராதாகிருஷ்ணனுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. அவரது காரின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். அவர்களுடன் ராதாகிருஷ்ணனும் இணைந்து போக்குவரத்தை சரி செய்தார்.
இந்த சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு வந்தார். பின்னர் அவரது வாகனத்தில் ஏறி ராதாகிருஷ்ணன் நொச்சிக்குப்பத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்துக்குள்ளானது பட்டினப்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செல்வம்