சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க இன்று (ஜூலை 11) கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய். வி. கங்காபூர்வாலா கடந்த மே 23ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவன் மே 24ஆம் தேதி முதல் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 நீதிபதி இடங்களுக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரை செய்தது ஏன்?
இதுதொடர்பாக இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி மகாதேவன் நியமனம் உச்சநீதிமன்ற அமர்வில் பன்முகத்தன்மையைக் கொண்டுவரும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வரிசையில் நீதிபதி ஆர் மகாதேவன் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பதை கொலீஜியம் கவனத்தில் எடுத்துள்ளது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவரின் வேட்புமனுவுக்கு கொலீஜியம் முன்னுரிமை அளித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த முதல் நீதிபதி!
அதே போன்று ”ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த முதல் நீதிபதி அவர்தான் என்றும்” கொலீஜியம் கூறியுள்ளது.
யார் இந்த நீதிபதி ஆர்.மகாதேவன்?
சென்னையில் 1963ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தார் நீதிபதி ஆர்.மகாதேவன். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்த அவர் 1989ஆம் ஆண்டு சென்னை பார் கவுன்சிலில் சேர்ந்து வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.
மறைமுக வரிகள், சுங்கம் மற்றும் மத்திய கலால் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றுள்ளார்.
தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞராக (வரி) பணியாற்றினார். மேலும் மத்திய அரசின் கூடுதல் நிலை வழக்கறிஞராகவும், இந்திய அரசின் மூத்த குழு வழக்கறிஞராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி 9000க்கும் மேற்பட்ட வழக்குகளை நடத்தியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் பணியாற்றி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”இம் என்றால் சிறைவாசம்” : சாட்டை துரைமுருகன் கைதுக்கு எடப்பாடி கண்டனம்!
தலைமை பயிற்சியாளராக ’கோபக்கார கம்பீர்’ : உச்சம் செல்லுமா இந்திய அணி?