puthukkottai fisherman 12 members arrested

தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அச்சுறுத்தல்!

தமிழகம்

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

12 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தில் இருந்து நேற்று (மார்ச் 22) காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இன்று (மார்ச் 23) அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

தொடர்ந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகுகளையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தொடரும் கொடுமைகள்

தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களது விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அவற்றை அரசுடைமையாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

சில சமயங்களில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குவதும் அவர்களது விசைப்படகுகளை சேதப்படுத்தும் கொடுமைகளும் நடந்து வருகிறது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மீனவர்களும் மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் வேலை நிறுத்த போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மத்திய வெளியுறவுத்துறைக்குத் தொடர்ந்து கடிதங்களை எழுதி வருகிறார். ஆனால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு இதுவரை தீர்வு கிடைக்காமல் இருந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்வதாக இலங்கை பருத்திதுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அவர்கள் 12 பேரும் இந்திய தூதரகம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகம் திரும்பாத நிலையில் மேலும் 12 மீனவர்கள் இன்று கைதாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று தாக்கல்!

தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *