ரூ.928 கோடிக்கு பருப்பு, பாமாயில் கொள்முதல்!

தமிழகம்

ரூ.928 கோடிக்குப் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்யப்பட இருப்பதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 11 அன்று அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் விலைவாசி உயர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

அதுபோன்று மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், தமிழ்நாட்டிற்கு மாதம் ஒன்றிற்கு 10,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 10,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்தச்சூழலில் விலைவாசி உயர்வு தொடர்பாகத் தமிழக அரசு இன்று (ஜூலை 14) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்குத் தேவையான 40,000 மெ.டன் துவரம் பருப்பு 464.79 கோடி ரூபாய்க்கும்

ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2023 மாதங்களுக்குத் தேவையான 5.10 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் 463.48 கோடி ரூபாய்க்கும் என மொத்தம் ரூ.928.27 கோடி மதிப்பில் கொள்முதலுக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டலக் கிடங்குகளிலும் இறக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்தக் கிடங்குகளிலிருந்து நியாயவிலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க நியாயவிலைக் கடைகள் மூலமாகத் தக்காளி கிலோ ஒன்றிற்கு 60 ரூபாய் விலையில் வழங்கப்பட்டுவருகிறது.

இன்று முதல் சென்னையில் ஏழு அமுதம் அங்காடிகளிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் ஏழு நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி கிலோ ஒன்றிற்கு 60 ரூபாய்க்கும் துவரம் பருப்பு அரை கிலோ 75 ரூபாய்க்கும் உளுந்தம் பருப்பு அரை கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இதற்குத் தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வரும் விலைக் கட்டுப்பாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது.

குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மூலமாகவும் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படாமலிருக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

விமான நிலையத்தில் ரஜினி: உற்சாக வரவேற்பு!

“பிரான்சில் திருவள்ளுவர் சிலை” – பிரதமர் மோடி உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *