ஆம்ஸ்ட்ராங் கொலை… கணவருக்கு பாதுகாப்பு கேட்கும் புன்னை பாலு மனைவி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ள ஆற்காடு சுரேஷ் தம்பி பாலுவின் மனைவி, தனது கணவருக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறையில் மனு அளித்துள்ளார்.
கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் அவரது வீட்டுக்கு அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலு, திருமலை, மணிவண்ணன், குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருவேங்கடம் போலீஸ் பிடியிலிருந்து தப்பமுயன்று, தான் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டார். இந்த நிலையில் போலீசார் திருவேங்கடத்தை நோக்கி சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் அக்கொலையில் தொடர்புடையவர் என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முதன்மை குற்றவாளியாக கருதப்படும் ஆற்காடு புன்னை பாலுவின் மனைவி விஜயசாந்தி தனது கணவரின் உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுகியுள்ளார்.
முதலில் கடந்த ஞாயிறு அன்று புகார் மனு கொடுக்க சென்ற நிலையில், அவரை திங்கள் கிழமை வருமாறு போலீசார் கூறியிருக்கின்றனர்.
அதன்படி தனது வழக்கறிஞருடன் நேற்று (ஜூலை 15) காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்ற விஜயசாந்தி, தனது கணவருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி மனு கொடுத்துள்ளார்.
அவரது மனு மேல் விசாரணைக்காக சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து விஜயசாந்தி, தனது கணவருக்கு பாதுகாப்பு கேட்டு, போலீசாரிடம் கொடுத்த புகார் மனுவின் நகலை இணைத்து உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யவிருக்கிறார் என தகவல்கள் வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
‘மினிக்கி மினிக்கி’ : கவனம் ஈர்க்கும் தங்கலான் பாடல்!