வயது வித்தியாசமின்றி அனைத்து பஞ்சாபியர்களுக்கும் பிடித்த உணவு பட்டியலில் பஞ்சாபி எக் மசாலாவுக்கும் இடமுண்டு. சப்பாத்தி, பரோட்டாவுக்கு சிறந்த சைடிஷாக அமையும் இந்த பஞ்சாபி எக் மசாலாவை நீங்களும் செய்து அசத்தலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கியமான உணவு இது.
என்ன தேவை?
வேக வைத்த முட்டை – 2
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பேஸ்ட்டாக அரைக்கவும்)
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியா) – அரை டேபிள்ஸ்பூன்
ஆம்சூர் பவுடர் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பிரியாணி இலை – ஒன்று
சீரகம் – அரை டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு சிட்டிகை
கஸூரி மேத்தி – ஒரு சிட்டிகை
நெய் – 50 மில்லி
அரைக்க…
முந்திரி – 10
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சின்ன துண்டு
பூண்டு – 20
கிராம்பட்டை, கிராம்பு, கசகசா – எல்லாம் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெந்நீரில் முந்திரியை 10 நிமிடம் ஊற வைத்து, அரைக்க கொடுத்த மற்றவற்றுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் மையாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் தீயைக் குறைத்து அரைத்த மசாலாவை போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி பிரியாணி இலை, சீரகம், வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் தக்காளி பேஸ்ட், மல்லித்தூள் (தனியா), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலா, கஸுரி மேத்தி, உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
வேக வைத்த முட்டையை இதில் சேர்த்து லேசாக கிண்டவும். வதக்கிய மசாலாவை இதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.