பூலித்தேவன் பிறந்தநாள்: பதற்றத்தில் தென்மாவட்டங்கள்! காரணம் என்ன?

Published On:

| By Prakash

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா, தென்காசி, செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆகியவற்றை முன்னிட்டு அங்கு போலீசார் குவிந்துள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளையர்களுக்கு எதிராக குரல்கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 307வது பிறந்தநாள் விழா இன்று (செப்டம்பர் 1) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நாளில் ஆண்டுதோறும் திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டான்செவலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

அவருடைய சிலைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் சென்று மாலை அணிவிப்பர். அங்கு போகமுடியாதவர்கள் அவருடைய படத்துக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவர்.

அமைச்சர் மனோ தங்கராஜ் மரியாதை!

அதிமுக ஒன்றாக இருந்தபோது, அனைத்து நிர்வாகிகளும் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.

ஆனால், இந்த முறை அதிமுக இரண்டாக பிரிந்திருப்பதால் எதிர்ப்பு கிளம்புவதுடன், அசம்பாவிதமும் ஏற்படலாம் என்பதால், எடப்பாடி பழனிசாமியை ’அங்கு செல்ல வேண்டாம்’ என போலீஸ் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

’அதற்குப் பதிலாக, அந்த சமூகத்தில் உள்ள உங்களது ஆதரவாளர்களை அனுப்பிவையுங்கள்’ எனவும் வேண்டுகோள் வைத்தனர்.

இதையடுத்து பூலித்தேவன் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துபவர்களின் பட்டியலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று (செப்டம்பர் 1) தெரிவித்துள்ளார்.

அதில் முன்னாள் அமைச்சர்கள் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏக்கள் ராஜன் செல்லப்பா, இசக்கி சுப்பையா உள்ளிட்டவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலரும், கட்சி நிர்வாகிகள் சிலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (செப்டம்பர் 1) காலை நெற்கட்டான் செவலிற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு திரும்பிவிட்டார்.

இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு செல்ல இருக்கிறார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் அங்கு கூட இருப்பதாகவும், இதனால் கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப இருப்பதாகவும் உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் பாதுகாப்பைப் பலப்படுத்தச் சொல்லி டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு புகாரும் சென்றுள்ளது.

நெல்லையில் போலீசார் குவிப்பு

இதையடுத்து, ஐஜி, டிஐஜி உள்ளிட்ட பெரும்படையினர், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது தங்கியிருக்கிறார்கள்.

எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 1,350 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கல்வீச்சு, மாட்டுச் சாணம், காலணிகள் உள்ளிட்டவற்றை வீசி பிரச்சினையை ஏற்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பூலித்தேவன் பிறந்தநாள் விழா மட்டும் அல்ல, செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுறது.

இந்த இரண்டு பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால், செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதிகளில் கலவரத்துக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வந்திருப்பதை அடுத்து, ஒவ்வோர் இடத்திலும் ஒரு எஸ்.பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூலித்தேவன் பிறந்தநாள் விழா, செங்கோட்டை,தென்காசி பகுதிகளின் விநாயகர் சதுர்த்தி விழாக்களால் தென் மாவட்டங்களே பதற்றமாக இருப்பதாக சொல்கிறார்கள் அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்.

வணங்காமுடி

பூலித்தேவன் 307வது பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share