புதுக்கோட்டை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் அனுமதிக்க மறுத்த பெண் மற்றும் இரட்டை குவளையை பயன்படுத்திய டீக்கடைக்காரர் ஆகிய 2 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இறையூர் கிராமம் வேங்கைவயல் ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை கலந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து கடந்த 27ம் தேதி இறையூர் கிராமத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் அப்பகுதி பொதுமக்களிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் பல தலைமுறைகளாக கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும்,
அதேபோல் அந்த பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு பட்டியல் இன மக்களை சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் அப்பகுதியில் உள்ள தேனீர் கடைக்கு சென்ற ஆட்சியர் அந்த தேநீர் கடையில் ஆய்வு மேற்கொண்டபோது,
அங்கு இரட்டை குவளை இருந்ததால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் டீக்கடை நடத்தி வந்த கணவன் மனைவி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதேபோல் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்லும் பொழுது அவர்களை இழிவாக பேசிய மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியதை தொடர்ந்து 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிங்கம்மாள் மற்றும் தேநீர் கடை நடத்தும் மூக்கையா உள்ளிட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் அவர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி சத்யா, இறையூர் கிராமத்தில் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய 2 வழக்கறிஞர் அடங்கிய குழுவை நியமித்தார்.
வழக்கறிஞர் குழுவுடன் வருவாய்த்துறையினர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் ஆய்வு நடத்தி வரும் 5 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதி, அதன்பிறகே ஜாமீன் மனு குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கலை.ரா